Tuesday, September 17, 2013
Thursday, September 5, 2013
வ. உ. சிதம்பரம்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு
வ. உ. சிதம்பரம்பிள்ளை(செப்டம்பர் 5, 1872 - நவம்பர் 18, 1936)கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித் தொண்டு செய்தவர் வ.உ.சி" என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு - வளர்ப்பு - கல்வி
தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதன் பிள்ளை - பார்வதி அம்மை என்பவர்களுக்கு மூத்த மகனாக இவர் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-ல் வழக்கறிஞரானார்.
தொழில்
உரிமையியல், குற்றவியல் ஆகிய இரண்டு சட்டத் துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார்.தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவு தேடினார்.
விடுதலைப் போராட்ட ஈடுபாடு
முதல்கட்டம்
சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.
கப்பலோட்டிய தமிழன்
ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
செக்கிழுத்த செம்மல்
தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து, இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது. (அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்). தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே.
அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார். செக்கிழுத்த செம்மல் என்ற பெயரும் இவருக்கு உண்டு. சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.
அரசியல் துறவு
அவர் சிறையில் இருந்த காலத்திலேயே சுதேசிக் கப்பல் கம்பெனி நொடித்துப் போனது. 1912 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் விடுதலை ஆகி வெளியே வந்தார். தூத்துக்குடி செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சென்னை செல்ல வேண்டியவரானார். வழக்கறிஞர் பட்டயமும் பறிக்கப்பட்டிருந்தது. சென்னையில் மயிலை, சிந்தாதிரிப்பேட்டை,பெரம்பூர் ஆகிய பகுதிகளில் அரிசி வியாபாரம் செய்து வாழ்ந்தார். விடுதலை வரலாற்றில் அந்தக் காலகட்டத்தில் திலகரின் சகாப்தம் முடிந்து காந்தியின் சகாப்தம் வேகம் பெற்றிருந்தது. அதில் வ.உ.சி.க்கு ஈடுபாடு இல்லை என்பதால் கிட்டத்தட்ட அரசியல் துறவு நிலையில் தான் இருந்தார்.
தமிழ்ப்பணி
சிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் பல.
• திருக்குறள் மணக்குடவர் உரைபதிப்பு
• மனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)
• அகமே புறம் (தத்துவம்)
• மெய்யறம் (ஆன்மீகப்புரட்சி நூல்)
• திருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)
• தொல்காப்பியம் இளம்பூரணர் உரைபதிப்பு
• வலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)
• சாந்திக்கு மார்க்கம் (தத்துவம்)
• சிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)
• மெய்யறிவு (அற நூல்)
சான்றிதழ்
"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"
1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.
நினைவு போற்றல்கள்
இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் வ.உ.சி பாத்திரத்தில் மறைந்த தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் நடித்தார்.
தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986-ல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் தான் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது.
இந்திய அரசும் இவரைக் கவுரவித்து அஞ்சல் தலை வெளியிட்டிருக்கின்றது.
ஆதாரம்
வ.உ.சிதம்பரனார் வரலாறு - இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை தமிழ்நாடு அரசு வெளியீடு.
வெளி இணைப்பு
• வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இல்லம்
• தமிழ் நேஷனில் வ.உ.சி பற்றிய தகவல்கள்
• வ.உ.சியை கவுரவித்து வெளியிட்ட அஞ்சல் தலை பற்றிய விபரங்கள்
Wednesday, September 4, 2013
சோழிய வெள்ளாளர்
சோழிய வேளாளர்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். 'பிள்ளை' என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட சூழலில், சித்திரை மேழி பெரிய நாட்டார் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது எனத் தெரிகின்றது. கைக்கோளர், அகம்படி முதலியார் போன்ற சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் அணியில் சேராமல் தங்களை வேளாளர் என அழைக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். உடையார், நயினார், மூப்பனார் ஆகிய சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பிலிருந்து தங்களை விடுத்தபின், பார்கவ குல சத்திரியர் என அழைத்துக் கொண்டனர். பண்டைய அகம்படி சாதிகளில் சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், இசை வேளாளர், வீரக்கொடியார் ஆகிய சாதிகள் மட்டுமே வேளாளர் சமூகத்தில் இடம் பெற்று விட்டனர். இவர்களையே உயர்குடி வேளாளராக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.
சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக் கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.
வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்து பிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். அக்குலத் தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழிய வேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம் அறியமுடிகின்றது.
மற்றொரு செய்தியின் படி பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.
“பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளான சேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப்புறத்திலிருந்து குமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர் தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள் ‘சோழிய முகம்மதியர்கள்’ என்று அறியப்பட்டனர்@ அல்லது பொதுவாக ‘சோழியர்’ (சோழதேசம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம் மதத்தினை ‘சோழிய’ என்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப் பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூக வழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்”
சோழியர் எனும் சொல்லானது “சோழதேசம்” என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின் மக்களைக் குறிக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கில அகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர் – சோழம் எனும் அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆன ஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப் பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும் போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத் தோழர் ஒருவரைச் “சோழிய” என்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழ தேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர் காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர்.
'சோழிய வெள்ளாளர்' போன்று பிள்ளை உட்பிரிவினை ஒத்த, ஆனால் சிறிது வேறுபட்ட 'சோழியர் இல்லம்' என்ற பிரிவு 'இல்லத்துப்பிள்ளைமார்' பிரிவின் ஓர் அங்கமாக உள்ளது.
சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத் தெய்வ திருத்தலமாகவும் சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும் முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும்.இதிலிருந்தே கொங்குச் சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர் பிரிவைச் சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளை உய்த்துணரலாம்.மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில் சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)